நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டின் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி. பிரதமர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்றார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.