தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்டத்தில் வாக்குப் பதிவான ஐந்து 5 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (17/04/2021) இரவு அந்தக் கல்லூரியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு கண்டெய்னர் இறக்கி வைக்கப்பட்டது. இந்த தகவல் தி.மு.க.வினர் மற்றும் அரசியல் கட்சியினருக்குத் தெரியவர அவர்கள் அங்கு திரண்டு வந்தனர். தி.மு.க.வின் தென்காசி நகர செயலாளரான சாதிர், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். கண்டெய்னரை அப்புறப்படுத்த வேண்டுமென குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் கண்டெய்னர் உள்ளே மின் இணைப்பு பெறுமளவுக்கு ப்ளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாதிர், "இது கட்டுமான கம்பெனிக்குச் சொந்தமானது. கட்டுமானம் நடப்பதால் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த காவல்துறையினர் கண்டெய்னரை ஆய்வு செய்துவிட்டு, பின்னர் அந்தக் கண்டெய்னரை அப்புறப்படுத்தச் சொன்னதால் அந்தக் கண்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே பரபரப்பு அடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையக் கல்லூரிப் பக்கம் கொண்டு வரப்பட்டதால் எங்களுக்குச் சந்தேகம். எங்களின் ஆட்சேபணைப்படி கண்டெய்னர் அப்புறப்படுத்தப்பட்டது" என்றார்.