ஆதீனங்களைக் கலந்தாலோசித்து மீண்டும் கோயில்களைத் திறக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் கூறுகையில், "கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் நல்ல நோக்கத்தில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பல கட்டங்களைத் தாண்டிய நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவுக்கு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜூன் எட்டாம் தேதி முதல் கோயில்களைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஆனால் மாநில அரசு தமிழகத் திருக்கோயில்களை திறப்பதற்கும், பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் அனுமதிக்கவில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா புதுவை போன்ற மாநிலங்களில் கோயில்கள் திறப்பதற்கும், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் கரோனா வைரஸ் தொற்று பரவும் தீவிரத்தைக் காரனம் காட்டி மறுத்து விட்டது.
விமானம் முதல் டாஸ்மாக் கடைகள் வரை திறந்து விட்ட தமிழக அரசு, கோயில்களை மட்டும் திறக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கோயில்களைத் திறப்பது சம்பந்தமாக தமிழக அரசு அண்மையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருக்கோயில்களை நிர்வகிக்கக் கூடிய மடங்களுக்கு உரிய அழைப்பில்லை. ஆனால் கோயில்களே இல்லாத மத நிறுவனங்களின் நிர்வாகங்களை எல்லாம் அழைத்து தமிழக அரசு கலந்தாலோசித்து விட்டு, கோயிலைத் திறப்பதற்கு மறுத்துள்ளது.
இதை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில்கள் என்றாலே திருமடங்கள்தான். மடங்களுடைய ஆலோசனை இல்லாமல், தமிழக அரசின் அறநிலை துறை எந்தச் செயலையும் செய்ய இயலாது, செய்யக்கூடாது. உடனடியாக தமிழக அரசு தமிழகத்திலுள்ள பெருமைமிகு சைவ ஆதீனங்களான திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, வேளாக்குறிச்சி போன்ற முதன்மையான ஆதீனங்களின் ஆதீன கர்த்தர்கள் மற்றும் வைஷ்ணவ மட ஜீயர்களையும், மடங்கள் இருக்கக்கூடிய மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்கள் மூலமாக அந்தந்த குருமகா சன்னிதானங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேரடியாகச் சந்தித்து ஆலோசனையைப் பெற்று அந்த ஆலோசனைப்படி உடனடியாக தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை திறப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறைய வேண்டுமென்றால் இறைவனுடைய அனுக்கிரகம் தேவை. இறைவனுடைய முழு அனுகிரகம் தேவை என்றால் இறை வழிபாட்டின் மூலம் அது கிடைக்கும். அந்த இறை வழிபாடு திருக்கோயில்கள் திறக்கப்பட்டால் தான் இயலும். ஆகையினால் மடாதிபதிகளின் ஆலோசனையைப் பெற்று தமிழக அரசு உடனடியாக பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பக்தர்கள் வழிபடுவதற்கு ஏதுவாக திருக்கோயில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியில் பக்தர்கள் முகக் கவசத்துடன் இரண்டு மீட்டர் இடைவெளியில் இறைவனைத் தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இறைவழிபாடு இல்லாமல் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் குறைக்க இயலாது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக திருமடங்கள் உள்ள இடங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களை அந்தந்த குருமகாசன்னிதானங்களைச் சந்தித்து அவர்களுடைய அருளாசியைப் பெற்று ஆலோசனையையும் பெற்று கோவில்களைத் திறக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.