Skip to main content

கோயில் அறங்காவலர் பணியிடை நீக்க விவகாரம்; அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Temple trustee removal issue; High Court action order to charity department

கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் செய்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜனவரி 3 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவிலை நிறுவிய பரம்பரை அறங்காவலரான மறைந்த மந்தன நரசிம்ம ராஜு, கடந்த 1985 ஆம் ஆண்டு தன்னுடன் சேர்த்து ஐந்து வாழ்நாள் அறங்காவலர்களை நியமித்ததாகவும், கடந்த 40 ஆண்டுகளில் அறங்காவலர்களின் சொந்த நிதியில், கிணறு தோண்டி, குழாய் இணைப்புகள் கொடுத்து, மின் விளக்குகள் பொருத்தி, கோவிலை ஒட்டியுள்ள மலைக்கு செல்ல நடைபாதை அமைத்து, அன்னதான மண்டபம் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கோவிலின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1999 - 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் மற்ற நான்கு அறங்காவலர்கள் மரணமடைந்து விட்ட நிலையில், சமூகத்தில் நன்மதிப்பை பெற்ற, நான்கு பக்தர்களை அறங்காவலர்களாக நியமிக்கும்படி, கோவை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இணை ஆணையரின் பரிந்துரையை ஏற்று, கோவிலுக்கு செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை ஆணையர், 2023 அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என கிருஷ்ணசாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இருப்பினும், நான்கு வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய தனது பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அப்போது இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கை துவங்கியுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்று வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், தனக்கு வயதாகி விட்டதாலும், வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கும் வரை, கோவிலுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்தது போன்ற காரியங்களைச் செய்த கண்ணன் என்பவரை தற்காலிக அறங்காவலராக செயல்படும்படி கோரியதாகவும், அதை ஏற்று அவர் தற்காலிக அறங்காவலராக செயல்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி விழா குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில் மற்ற உறுப்பினர்கள், கோவில் வரவு செலவு விவரங்களைக் கேட்ட போது, கண்ணன் அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால், அவரை பதவியில் இருந்து நீக்கியதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் கோவில் அறங்காவலர்களுக்கு எதிராக கண்ணன், அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கும், பிற அறங்காவலர்களுக்கும் எதிராக அறநிலையத் துறையில் புகார் அளித்த கண்ணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உத்தரவு பெற்றதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலித்தும், கோவில் கணக்கு வழக்குகளை முறையாக கையாளவில்லை என்றும் கண்ணனுக்கு எதிராக அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் கோவிலை முறையாக நிர்வகிக்கவில்லை என கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு ஆஜராகி இந்த பொய் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளித்த போதும், தன்னை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்காமல் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம் ஆஜராகி,  இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஆராயாமல், கவனத்தை செலுத்தாமல் உத்தரவை பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண்நடராஜன், அறங்காவலர்கள் இறந்ததை தெரிவிக்கவில்லை என்றும் நன்கொடை சீட்டுகள் அடித்ததில் அனுமதி பெறவில்லை என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி மனுதாரருக்கு உரிய விளக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மனுதாரருக்கு எதிராக எந்த ஒரு பாதகமான நடவடிக்கைகளையும் நீதிமன்ற அனுமதியின்றி எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 28 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்