Skip to main content

‘சம்பளம் கொடுக்க முடியல... வேலை பாக்குறாங்களாம் வேலை...’-ரகளையில் ஈடுபட்ட ஆசிரியை

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 The teacher involved in the riot

 

கரோனா கட்டுப்பாடுகளால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து தன்னார்வலர்களைப் பயன்படுத்தி கிராமங்கள் தோறும் இல்லம் தேடி கல்வி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது அரசு. இந்தப் பயிற்சி மையங்களை ஆசிரியர்கள் கண்காணிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொரு பக்கம் ஆசிரியை ஒருவரின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டாரத்தில் உள்ள மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியை எஸ்.தைலம்மை (வயது 54) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகப் பள்ளிக்கு சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சில மாதங்களுக்கான சம்பளத்தைப் பிடித்தம் செய்துள்ளனர். சம்பளத்திற்காக சில மாதங்களாக அலைந்த தைலம்மை சில நாட்களுக்கு முன்பு மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலகம் சென்று தனது சம்பளம் பற்றிக் கேட்டுள்ளார்.

 

அங்கு சரியான பதில் இல்லை என்றவுடன் அங்கிருந்த கணினி மற்றும் மேஜைகளில் இருந்த கோப்புகளைக் கீழே தள்ளிவிட்டு, ‘சம்பளம் கொடுக்க முடியல... வேலை பாக்குறாங்களாம் வேலை...’ என ஆத்திரத்தில் ரகளை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மற்றும் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ராஜாராம் ஆகியோருக்கு அனுப்பியிருந்தனர். ரகளை செய்து அலுவலகப் பொருட்களைச் சேதப்படுத்திய ஆசிரியை தைலம்மையை தற்காலிகப் பணியிடைநீக்கம் செய்து அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் மணமேல்குடி காவல் நிலையத்திலும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்