Skip to main content

கள்ளக்குறிச்சி: டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை!!!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
Tasmac

 

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலையில் கிரி மாதா அம்மன் கோயில் அருகே உள்ளது அரசு டாஸ்மாக் மதுபானக்கடை. இந்த மதுபானக் கடையில் மது பாட்டில்கள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடை நகரத்தை விட்டு அரைகிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது.

 

இரவு நேரங்களில் இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும் உளுந்தூர் பேட்டையில் இருந்து திருவெண்ணைநல்லூர் சாலையில் இரவு நேரங்களில் எப்போதாவது சில வாகனங்கள் செல்லும் மற்றபடி அந்த சாலை இரவு நேரங்களில் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் அந்தப் பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை கொள்ளையர்கள் பல நாட்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர்.

 

மேலும் இந்த கடைக்கு இரவு காவலராக ஹரிதாஸ் என்பவர் இரவு நேரங்களில் காவலுக்கு இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 2 டூவீலர்களில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அப்போது இரவு காவலர் ஹரிதாஸ் சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார். அவரை கடைக்கு முன்பாகவே அடித்து உதைத்து கட்டிப் போட்டுவிட்டு டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை சாக்கு மூட்டைகளில் அள்ளிப்போட்டு கட்டிக்கொண்டு டூவீலர்களில் பரந்து சென்றுள்ளனர்.

 

அப்போது தற்செயலாக நகரில் ரோந்து வந்த போலீசார் சந்தேகப்படும் வகையில் சாக்கு மூட்டைகளோடு இரண்டு டூவீலர்களில் மூன்று பேர் அதிவேகமாக செல்வதை பார்த்துள்ளனர் உடனடியாக அவர்கள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எழிலரசியை தொடர்புகொண்டு தகவல் கூறியுள்ளனர் உடனே அவர் அனைத்து போலீசாரையும் உஷார்படுத்தியுள்ளார்.

 

இதில் இன்ஸ்பெக்டர் சக போலீசாருடன் சாக்குமூட்டையில் மதுபாட்டில்கள் கடத்திய அந்த மூவரையும் துரத்தி சென்று அதில் ஒருவரை மட்டும் மதுபாட்டில்களோடு பிடித்துள்ளளார் மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். டாஸ்மாக் மதுபானக் கடை காவலாளியை கட்டிப்போட்டு விட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

அவரும் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் உட்பட போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைக்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர் மேலும் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் மாட்டிக்கொண்ட ஒருவரிடம் தீவிர விசாரணையும் போலீசார் நடத்தி வருகிறார்கள் காவலாளியை கட்டிப்போட்டு விட்டு, டாஸ்மாக் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்