Skip to main content

மின்வாரியத்தின் புதிய முடிவு; மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

taminadu electricity board new announcement public very happy

 

தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விநியோகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்சார வாரியம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு மின்சார வாரியம் சார்பில் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில் சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் மின் கட்டணம் செலுத்த மின்சார அலுவலகத்திற்கு சென்றபோது கூடுதலாக டெபாசிட் தொகை செலுத்தக் கூறியுள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வீடீயோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. மேலும் மின்சார வாரியத்தின் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில், கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட் தொகை வசூலிப்பதை தவிர்க்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை மின்சார வாரியம்  நிறுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்து வரும் மாதாந்திரக் கட்டணத்தில் இருந்து கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த முடிவு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'Rajesh Das petition dismissed' - High Court action

தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரின் முன்னாள் கணவரான தமிழகத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கடந்த மே 21 ஆம் தேதி அவரின் நண்பர்களுடன் பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார், ராஜேஷ் தாஸ் மீது கொலை மிரட்டல், சட்ட விரோதமாகக் கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ராஜேஷ் தாஸ் வசித்து வரும் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் கடந்த மே 20 ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையின் முதன்மை செயலாளராக இருப்பதால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே சமயம் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு பதிவு பீலா வெங்கடேசன் பெயரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தற்போது அவர் மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

'Rajesh Das petition dismissed' - High Court action

இதனையடுத்து வீட்டுக் காவலாளியைத் தாக்கிய வழக்கில் ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கடந்த 24 ஆம் தேதி (24.05.2024) காலை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற பிணையில் ராஜேஷ் தாஸ் விடுவிக்கப்பட்டார். அதே சமயம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பீலா வெங்கடேசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவர், “தையூர் பங்களா வீட்டில் வீட்டின் மின்சார இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டு விட்டதால் இந்த மனு செல்லத்தக்கதல்ல. பீலா வெங்கடேசன் பெயரில் மின் இனைப்பைத் தற்காலிகமாகத் துண்டிக்கும் படி கோரிக்கை வைப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது. ராஜேஸ் தாஸுக்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு விடும், பல இடங்களில் தங்கும் விடுதிகளும் உள்ளதால் அந்த இடங்களில் அவர் தங்கிக்கொள்ளலாம்” என வாதிட்டார். 

'Rajesh Das petition dismissed' - High Court action

அதற்கு ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. பிரகாஷ், “அந்த வீட்டிற்கான வீட்டுக்கடனை ராஜேஷ் தாஸ் தான் செலுத்தி வருகிறார். எனவே, அவருடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்குத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (11.06.2024) தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், “இந்த வசிப்பிடம் குறித்து இந்த நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தான் தீர்மானிக்க முடியும். இருவரும் சமரசம் மையத்திற்குச் சென்று சமரசம் செய்துகொள்ள உத்தரவிட முடியாது” எனக் கூறி ராஜேஷ் தாஸின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

ஆபத்தான நிலையில் மின்கம்பம்; கயிறு கட்டிய மின்வாரியம் - கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Power workers tied a rope to hold the falling power pole

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களா மேடு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய  பெய்த கனமழையின் காரணமாக தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்துள்ளது. அடுத்த முறை வேகமாக காற்று அடித்தால் இந்த மின்கம்பம் கீழே விழும் நிலையில் இருக்கிறது என அப்பகுதி மக்கள் மின்வாரியத்துக்கு தகவல் கூறியுள்ளனர்.

அதனை நேரில் வந்து பார்த்த நாட்றாம்பள்ளி மின்வாரிய அதிகாரிகள்,  மாத்தி நடுவதற்கு மின்கம்பம் இல்லை எனச் சொல்லி நீண்ட கயிறு கொண்டுவந்து கம்பத்தின் உச்சியில் கட்டி கம்பம் கீழே விழாமல் இருப்பதற்காக அந்த கயிறை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உலோக தடுப்பானில் கட்டியுள்ளனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழைநீர் மின்கம்பம் அதில் கட்டப்பட்டுள்ள கயிறில் பட்டு சாலையோரம் உள்ள தடுப்பான் வரை மின்சாரம் பாயும் நிலை ஏற்படும். இது தெரிந்தும் இப்படி செய்த மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுவரை எந்த வித அசம்பாதவிதமும் ஏற்படவில்லை, ஒரு அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.