Skip to main content

தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய பெண்கள்!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

perambalur

 

பெரம்பலூர் மாவட்டத்தில் கொட்டரை நீர்த்தேக்கம் உள்ளது. கடந்த 6- ஆம் தேதி சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 12 இளைஞர்கள் இந்த நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். நீர்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியே செல்லும் பகுதியில் சுமார் 10 அடி ஆழம் அளவிற்கு தேங்கியிருந்த தண்ணீரில் மேற்படி இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பவன்குமார், கார்த்திக், ரஞ்சித், பவித்ரன் ஆகிய 4 இளைஞர்களும் குளிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அங்கிருந்து நீந்தி கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களுடன் வந்த மற்ற இளைஞர்கள் தங்களின் நண்பர்கள் நால்வரும் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்து பதறிப்போய் கூச்சலிட்டனர். அப்போது அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஆதனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ்ச்செல்வி, சுந்தரபாலன் என்பவரின் மனைவி முத்தம்மாள், அண்ணாமலை என்பவரின் மனைவி ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்களும் இளைஞர்கள் போட்ட சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்தனர். 

 

தண்ணீரில் நீச்சல் தெரியாமல் நான்கு இளைஞர்கள் தத்தளிப்பதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் மூன்று பெண்களும் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்று தங்கள் அணிந்திருந்த சேலையை பயன்படுத்தி அதைஒன்றாக சேர்த்துக் கட்டி நீரில் தத்தளித்த இளைஞர்கள் நோக்கி வீசினார்கள். அந்த சேலையை பிடித்து கொண்ட பவன்குமார், கார்த்திக் ஆகிய இருவரும் கரைக்கு திரும்பினர். பின்னர் அந்த மூன்று பெண்களும் மீண்டும் தண்ணீரில் நீந்திச் சென்று தண்ணீரில் தத்தளித்த  மேலும் இருவரை தேடி பார்த்தனர். அதற்குள் அந்த இரு இளைஞர்களும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் நீர்தேக்கத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக நீர்த்தேக்கத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய பவித்ரன், ரஞ்சித் ஆகிய இருவரது சடலத்தையும் மீட்டனர். தங்கள் உயிரை பெரிதாக கருதாமல் தண்ணீரில் தத்தளித்த இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்ட மூன்று பெண்களின் துணிச்சலையும், மனிதாபிமானத்தையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூகவலைதளங்களில் பெண்களின் வீரதீர செயல் குறித்து பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

ஆகஸ்ட் 15- ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வீரதீர செயல் புரிந்ததற்காக மூன்று பெண்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பெரம்பலூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளைஞர்களைக் காப்பாற்றிய பெண்கள் கூறும்போது, "நீர்த்தேக்கத்தில் இறங்கி குளிப்பதற்கு வந்த இளைஞர்களிடம் நாங்கள் மூவரும் இப்பகுதியில் தண்ணீர் ஆழம் அதிகம் இருக்கும். அதனால் படிக்கட்டிலிருந்து குளிக்க வேண்டும். தண்ணீருக்குள் கீழே  இறங்க வேண்டாம் என நாங்கள் முன்னெச்சரிக்கையாக அவர்களிடம் தெரிவித்தோம். அதன்பின் நாங்கள் துணி  துவைத்துக் கொண்டிருந்தோம். அப்போது மற்ற இளைஞர்கள் கத்தி சத்தம் போட்டனர்.

 

அதை கேட்டு நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது 4 இளைஞர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீரில் குதித்து நாங்கள் அணிந்திருந்த சேலையை பயன்படுத்தி இரண்டு பேரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மீண்டும் தண்ணீரில் நீந்திச் சென்று மற்ற இருவரையும் காப்பாற்றுவதற்க்குள் அவர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டதால் அவர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அது எங்களுக்கு வருத்தமாக உள்ளது."  இவ்வாறு அந்த மூன்று பெண்களும் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்