Skip to main content

தமன்னா அதிரடி கைது; ரோஹில் தலைமறைவு..! பெண் சடலத்தை மீட்டு போலீஸ் தீவிர விசாரணை!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

incident in hosur

 

தைலமரத்தோப்பில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் & தளி சாலையில் உள்ள பேளகொண்டப்பள்ளியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே உள்ள தைலமரத்தோப்பில் இருந்து திங்கள்கிழமை (ஏப். 26) மாலையில், அழுகிய சடலத்தின் துர்நாற்றம் வீசியது.

 

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகத்தின்பேரில், தைலமரத் தோப்புக்குள் சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பது தெரிய வந்தது. கொலையுண்ட பெண்ணின் கைகள் இரண்டும் பின்பக்கமாக கட்டப்பட்டு இருந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மத்திகிரி காவல்நிலைய காவல்துறையினர், சம்பவ இடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட இளம்பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல் தெரிந்தது. இதுகுறித்து விசாரிக்க எஸ்.ஐ., சிற்றரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பேளகொண்டப்பள்ளியில் அசாம் மாநிலம் கலிம்காஞ்சி சிங்காலி கிராமத்தைச் சேர்ந்த ரோஹில் (25) என்பவர் அவருடைய மனைவி அலிதா (24) என்பவருடன் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். ரோஹில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர்களுடன் அலிதாவின் தங்கை தமன்னாவும் (20) தங்கியிருந்தார்.

 

இந்நிலையில் ரோஹிலுக்கும், தமன்னாவுக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டு, நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்தது. அலிதா ஊரில் இல்லாத நேரங்களில், அவர்கள் இருவரும் பல இடங்களில் தனியாக சுற்றியுள்ளனர்.

 

இதையறிந்த அலிதா, கணவரையும், தன் தங்கையையும் கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இனியும் அலிதா உயிருடன் இருந்தால் தாங்கள் நெருக்கமாக தொடர்பு கொள்ள முடியாது என்பதை உணர்ந்த ரோஹிலும், தமன்னாவும் அலிதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

 

இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அலிதாவின் கைகளை பின்பக்கமாக ரோஹிலும், தமன்னாவும் கட்டிப்போட்டனர். பின்னர் உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கிக் கொன்றுள்ளனர். அதையடுத்து அலிதாவின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் தைலமரத் தோப்பிற்குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

அப்பகுதியில் பதுங்கி இருந்த தமன்னாவை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட ரோஹிலை தீவிரமாக தேடி வருகின்றனர். தவறான தொடர்புக்கு இடைஞ்சலாக இருந்ததால் உடன்பிறந்த அக்காளையே தங்கையும், அக்காள் கணவரும் தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்