Skip to main content

கஞ்சா கடத்திய மாணவர்கள்! சேஸ் செய்து பிடித்த தமிழக காவல்துறை!

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Tamilnadu police chased and caught youngsters in viluppuram

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய வேட்டை நடத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் தடை செய்யப்பட்ட சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் ஏட்டுகள் தயாள்ராஜ், கணபதி, ஆயுதப்படை காவலர் மோகன்குமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்த போது அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர். உடனே அவர்களை போலீசார் தங்களது இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். அவர்கள் இருவரும் கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே சென்ற போது போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி தலை மறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பின்னால் பையுடன் அமர்ந்து வந்த வாலிபரை போலீசார் பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரம் கீழ்செங்கல்மேட்டை சேர்ந்த ஜெயராமன் மகன் அஜய் (வயது 20) என்பதும், தப்பியோடியது அவரது நண்பர் லாலி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரது பையை சோதனை செய்தபோது அதில் 5 கிராம் அளவில் சிறு சிறு பொட்டலங்களாக 100 பொட்டலங்களும், மற்றொரு கவரில் 600 கிராம் கஞ்சா இலையும் தழையுமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ஒன்றரை லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

 

அதனைத் தொடர்ந்து அஜய்யிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், அவருடன் கஞ்சா புகைக்கும் போது நண்பரான லாலியும் சேர்ந்து புதுச்சேரிக்கு சென்று அங்கு அடையாளம் தெரியாத சிலரிடம் கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்திக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அஜய்யை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான லாலியை தேடி வருகின்றனர். 

 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் விஜயகுமார், கரிகால் பாரிசங்கர் ஆகியோர்  நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்