சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 4299 பதவிகளில் 403 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியுள்ள பதவிகளுக்கு 13923 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழகம் முழுவதும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30- ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வரும் 27ம் தேதி, 12 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2294 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக டிசம்பர் 30- ஆம் தேதி 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2005 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், தேர்தலில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தவர்கள், தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் வேட்புமனுக்களை, டிசம்பர் 19- ஆம் தேதி (வியாழக்கிழமை) திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இப்பதவிக்கு மொத்தம் 254 பேர் வேட்மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 9 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 245 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 79 வேட்பாளர்கள், தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 166 பேர், இரண்டு கட்டங்களாக தேர்தலைச் சந்திக்க உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 288 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 2045 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனையின்போது 63 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1982 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இந்நிலையில், 640 வேட்பாளர்கள் நேற்று தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 3 பேர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 1339 பேர் தேர்தல் களத்தைச் சந்திக்க உள்ளனர்.
இம்மாவட்டத்தில் மொத்தம் 385 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் ஒரு தலைவர் என மொத்தம் 385 பதவிகளுக்கு 2502 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 40 பேருடைய மனுக்கள் சரியில்லை என நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, 2462 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்களில் 815 பேர் நேற்று வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். 8 பேர், கிராம ஊராட்சிமன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 3597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 12416 பேரிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 102 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 12314 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், 1143 பேர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். மேலும், 392 பேர் வார்டு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள். இதையடுத்து, 13923 பேர் தேர்தலை சந்திக்க உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 8 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், 392 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 403 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வரும் 27- ஆம் தேதி நடக்க உள்ள முதல்கட்ட தேர்தலில் 4299 பதவிகளுக்கு 13923 பேர் போட்டியிடுவதாக சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராமன் தெரிவித்துள்ளார்.