கருவில் தொடங்கி கல்லறை வரை மருத்துவப் பணி என்றால் அது கிராம சுகாதாரச் செவிலியர்களின் தன்னலமற்ற சேவைதான். அப்படி மக்களுக்காக முழுமையாக தங்களை ஈடுபடுத்தி செவிலியர் பணியில் ஈடுபட்டு வரும் கிராம சுகாதார செவிலியர்களை அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு ஏராளமான வேலைகளை திணிப்பதும், பணி மாறுதல், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் கிராம சுகாதார செவிலியர்கள் கடும் மன உளைச்சளில் உள்ளார்கள். தமிழக சுகாதாரத் துறையின் செயலாளர் பீலாராஜேஷ், செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பணிப்பளுவை அதிகரிக்கும் வகையில் ஆய்வுக் கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்டவையை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை மருத்துவர்கள், செவிலியர்கள் முன்வைத்துள்ளனர்.
இதைக் கண்டித்து மருத்துவத் துறை பணியாளர்கள் மாநிலம் முழுவதும் பல கட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக நாளை (14.02.2020) வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி, சமுதாய செவிலியர்கள் (VHN, SHN, CHN) என அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு போராட்ட குழுவின் சார்பாக சென்னையில் உள்ள மாநில தலைமை சுகாதாரப் பணிகள் இயக்குனர் (DMS) அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் சென்னையில் குவிந்து வருகிறார்கள்.
சுகாதாரத்துறை செவிலியர்களின் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் 13- ஆம் தேதி மாலை துறையின் உயரதிகாரிகள் செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்து போராட்டத்தை கைவிடுங்கள், மீறி போராட்டம் நடத்தினால், அதில் கலந்துக் கொள்ளும் அனைவரையும் சஸ்பெண்ட் செய்வோம் என அதிகாரிகள் கூறியதாகவும், ஆனால் திட்டமிட்டப்படி எங்கள் போராட்டம் நடக்கும் என அதிகாரிகளிடம் உறுதியாக தெரிவித்ததாக செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிகிச்சை கொடுக்கும் சுகாதாரத்துறைக்கு செவிலியர்கள் போராட்டம் என்ற சிகிச்சையை கொடுக்கிறார்கள்.