Skip to main content

வெள்ள நிவாரண நிதி- மத்திய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

TAMILNADU CHIEF MINISTER MKSTALIN WROTES A LETTER FOR UNION HOME MINISTER

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கிட வலியறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16/01/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "2021 வடகிழக்கு பருவமழையின் போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத  மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ள முதலமைச்சர், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசிடமிருந்து ரூபாய் 6,230.45 கோடி நிதியுதவி கோரி தனது அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும்; கோவிட்- 19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான பெரும் நிதித் தேவை மாநில நிதி நிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதே வேளையில், கரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். 

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்பட்டுளளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர்,  தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் தாங்கள் உதவிட வேண்டும்" என்றும் மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இன்று (17/01/2022) டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார். 
 

சார்ந்த செய்திகள்