Skip to main content

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழ்ப்பெண்; முதல்வர் வாழ்த்து

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

tamil girl muthamilselvi achievement mount everest cm mk stalin congrats 

 

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்ற முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த நாராயணன் - மூர்த்தியம்மாள் என்ற தம்பதியரின் மகள் முத்தமிழ்ச்செல்வி (வயது 38). இவர் தற்போது திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சிறு வயது முதலே மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை புரிய வேண்டும் என்ற கனவோடு இருந்து வந்துள்ளார். மேலும் அதற்கான முயற்சிகளையும் பயிற்சியையும் தொடர்ந்து எடுத்து வந்தார்.

 

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைய நிறைய நிதி தேவைப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசிடம் தனது கோரிக்கையை முன்வைத்து இருந்தார். மேலும் முத்தமிழ்ச்செல்வியின் கோரிக்கையை  ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இவரின் தன்னம்பிக்கையை பாராட்டும் விதமாக அரசு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார்.

 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறத் தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி தனது பயணத்தின் 51வது நாளான கடந்த 23 ஆம் தேதி ஏறத்தாழ 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளான கடந்த 17 ஆம் தேதி அன்று தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை புரியவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார். 

 

tamil girl muthamilselvi achievement mount everest cm mk stalin congrats 

 

மலையேற்றத்தின் போது அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முத்தமிழ்ச்செல்வி அடைந்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், "உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும் முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்