சேலம் அருகே, தாபா உணவக ஊழியர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் அஸ்தம்பட்டி கல்லாங்குத்து புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). சேலம் அருகே உள்ள சின்ன சீரகாபாடியில் உள்ள உள்ள ஒரு தாபா உணவகத்தில் வேலை செய்து வந்தார். ஜூன் 3ம் தேதி மாலை, வீட்டில் இருந்த மணிகண்டன், திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்டது.
மணிகண்டன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, செல்போனில் தனது நண்பர்கள், உறவுக்காரர்களுக்கு ஒரு காணொளியை பதிவு செய்து அனுப்பி வைத்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
அந்த காணொளியில், ''நான் வேலை செய்து வந்த தாபா உணவகத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டதாக, உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர், என்னிடம் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டனர். அந்தப் பணத்தை தராவிட்டால் காவல்துறையில் புகார் செய்வோம் என்று மிரட்டினர்,'' என்று கூறியிருந்தார்.
உணவக உரிமையாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சியே அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவருடைய உறவினர்கள், சடலத்தை வாங்க மறுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு தூண்டியதாக தாபா உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் எனக்கோரினர். அவர்கள் மீது சாதி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் இருந்து மணிகண்டனின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, மணிகண்டன் மரண வழக்கை தற்கொலை என்று பதிவு செய்திருந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர், தாபா உணவக உரிமையாளர் பாலாஜி, அசோக், சுரேஷ் ஆகிய மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து, காவல்துறை உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.