ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன. இதில் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்தளவுக்கு முக்கிய ரயில் நிலையம் இது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு நடைமேடை எண் 5-ல் அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. சீருடையில் 2 மாணவர்கள் தண்டவாளத்தில் குதித்து கட்டிப் பிடித்து புரண்டனர். ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடிக்கிறார். அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுகிறார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நடைமேடை எண் 5-ல் எந்த ரயில்களும் வரவில்லை.
இந்த சம்பவங்களை அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள், பார்த்து திகைத்து நின்றனர். இதனை ரோந்து வந்த ரயில்வே போலீஸார் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். உடனே அங்கே வேகமாக வந்து அந்த இரண்டு மாணவர்களையும் தண்டவாளத்தில் இருந்து மீட்டு அவர்களை அனுப்பிவைத்தனர். இந்த விவகாரத்தில் ரயில்வே போலீஸார், மாணவர்களிடம் விசாரணை ஏதும் நடத்தவில்லை என சொல்லப்படுகிறது.
கஞ்சா போதையில் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்கள் ரயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அங்கிருந்த அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். அதே நேரம் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.