சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் சிகை அலங்காரம் என்ற பெயரில் பலவிதமாக முடிவெட்டி வருகின்றனர். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இதுபோன்ற மாடலாக சிகை அலங்காரம் செய்து வருவதை தடுத்து வருவதுடன் சிகை அலங்காரம் செய்யும் கடைகளிலும் பள்ளி மாணவர்களுக்கு இது போல மாடலாக முடி வெட்டக் கூடாது என்றும் கூறி உள்ளனர். ஆனாலும் மாணவர்கள் தலைமுடியை மாடலாக வெட்டி வருவது குறைந்தபாடில்லை. இப்படியான சிகை அலங்காரம் வேண்டாம் என்று ஆசிரியர் சொன்னதால் மாணவர் தூக்கில் தொங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மச்சுவாடி முன்மாதிரிப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று தேர்வு எழுத வந்த போது அவரது தலைமுடி மாடலாக இருப்பதைப் பார்த்த தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமுடியை வெட்டிக் கொண்டு பள்ளிக்கு வா என்று திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
காலையில் பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் தேடி வந்த நிலையில் மாணவன் காலையிலேயே முடிவெட்டி வரச் சொல்லி திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளனர். தொடர்ந்து மாணவனை தேடிய போது பள்ளி அருகிலேயே உள்ள ஒரு மரத்தில் சடலமாக தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த கணேஷ் நகர் போலிசார் மாணவன் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாணவனின் உறவினர்கள், சக மாணவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு பள்ளியைவிட்டு வெளியே அனுப்பிய தகவலை மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.
தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். விசாரணைக்குப் பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவர்கள் தற்கொலை வரை செல்லும் அளவிற்கு அவர்களின் மனநிலை உள்ளது. இதனை மாற்ற ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் மனநிலையை சரி செய்யும்விதமாக மாதம் தோறும் மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.
அதே போல முதலில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி மாணவர்களின் ஒழுக்கம், சிகை அலங்காரம், மனநிலை பற்றியெல்லாம் ஆலோசிக்க வேண்டும். சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பாத நிலை ஏற்படுவதுடன் மாணவர்கள் சாதாரணமாக விபரீத முடிவுகள் எடுப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்கின்றனர்.