Skip to main content

ப்ளூ வேல் விளையாட்டுக்கு மாணவன் பலி: 4-ம் தேதி விசாரணை: ஐகோர்ட் கிளை

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
ப்ளூ வேல் விளையாட்டுக்கு மாணவன் பலி: 4-ம் தேதி விசாரணை: ஐகோர்ட் கிளை

ப்ளு வேல் விளையாட்டுக்கு மதுரையில் மாணவன் பலியான விவகாரத்தில் வரும் 4ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. 

மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரின் 2-வது மகன் விக்னேஷ் (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போனை அவருடைய பெற்றோர் வாங்கிக்கொடுத்தனர்.

தடை செய்யப்பட்ட ப்ளூ வேல் விளையாட்டை அந்த செல்போன் மூலம் அவர் விளையாடி உள்ளார். நேற்று, வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது அவரது வலது கையில் திமிங்கலத்தின் உருவத்தை வரைந்திருந்தார். மேலும் அவரது நோட்டுப்புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், “நீலத்திமிங்கலம் விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது” என்றும் எழுதி வைத்திருந்தார். இதனால் அவர் இணைய தளம் வழியாக ப்ளூ வேல் விளையாட்டை விளையாடியதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கோரமான விளையாட்டை தடை செய்யக்கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, மாணவன் மரணம் குறித்தும், இவ்விளையாட்டை தடை செய்ய அரசுக்கு உத்தரவிடுவது குறித்தும் தாமாக முன்வந்து விசாரணை செய்யப்போவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரும் 4-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்