Skip to main content

கரோனா காலத்திலும் தெரு நாய்களின் வழக்கமான வாழ்க்கைக்கு எந்த தடையும் இல்லை...!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

street dog problems
                                                      மாதிரி படம்

 

கரோனா காலம் ஒருவருக்கொருவர் விலகியே இருக்க வேண்டும் என்ற பிரச்சாரம் அல்லது உத்தரவு என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் தெருவில் சுற்றும் தெரு நாய்களுக்கு கிடையாது. அதனால் தான் என்னவோ கரோனா காலத்தில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் சராசரியை விட இரண்டு மடங்கு கூடியுள்ளது என்கிறார்கள் நாய் பிரியர்கள். இதன் விளைவு பாதிப்பு என்னவோ தெருவில் நடக்கும் மக்களுக்குதான்.


ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. சமீபகாலமாக மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் எண்ணிக்கை மிகவும்  அதிகரித்ததோடு  நாய்களின் தொல்லையும் கூடிவிட்டது. ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, காந்திஜி ரோடு, ரயில் நிலையம் அருகே சென்னிமலை ரோடு, கருங்கல் பாளையம் வீரப்பன்சத்திரம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான தெரு நாய்கள்  சுற்றித் திரிகின்றன. தெருக்களில் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி துரத்தி குரைப்பதால், நாய்கள் துரத்தியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவர்களும் உண்டு. 

குறிப்பாக கறிக் கடைகள் இறைச்சிக் கடைகள் முன்பு 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒன்று கூடி நிற்கின்றன. அப்போது அந்த வழியாக நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துகிறது. தெருநாய்கள் எண்ணிக்கை குறைக்கும் வகையில் அவைகளுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் தெருநாய்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. 


காலை நேரம் மாலை நேரம் இரவு நேரம் என எந்த நேரமும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 20 முதல் 30  பேர் வரை நாய் கடிக்காக  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி பார்த்தால் ஒரு மாதத்தில் மட்டும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 700 முதல் 1,000 பேர் வரை நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  எனவே பெருகி வரும் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் கரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அகில இந்திய பிராணிகள் நல வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் அதன்  நிர்வாகிகளிடம் தகவல் கேட்டு வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடங்கப்படும் என்றார். கரோனா காலத்திலும் தெரு நாய்களின் வழக்கமான வாழ்க்கைக்கு எந்த தடையும் இல்லை.

 

 

சார்ந்த செய்திகள்