Skip to main content

தந்தையின் சடலத்துடன் 3 நாட்கள் தனியாக தங்கியிருந்த மகன்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
The son stayed alone with his no more father for 3 days in madurai

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (74). ஜோதிடரான இவருக்கு கார்த்திக் சீனிவாசன் (40) என்ற மகனும், ஷர்மிளா (44) என்ற மகளும் உள்ளனர். கார்த்திக் சீனிவாசன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. மகள் ஷர்மிளா திருமணம் ஆகி வில்லாபுரம் பகுதியில் உள்ள கணவருடன் வசித்து வருகிறார். ஜெகதீசன் தனது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள 2 கடைகளை வாடகைக்கு விட்டு இருந்து அதில் வரும் வருமானத்தை வைத்து நாட்களை கடத்தி வந்தார். மேலும், கார்த்திக் சீனிவாசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜெகதீசன் தான் அவரை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஜெகதீசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். அதனால் ஷர்மிளா, தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கும் தினமும் வீட்டிற்கு வந்து உணவு அளித்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 10ஆம் தேதி தந்தை மற்றும் சகோதரருக்கு உணவு கொடுத்துவிட்டு ஷர்மிளா தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்பு, ஷர்மிளா உணவு கொடுக்க தந்தை வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெகதீசன் வீட்டில் இருந்து கடந்த 3 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த வீட்டில் இருந்து ஜெகதீசனோ, அவருடைய மகனோ வெளியே வராமல் இருந்ததை கண்டு கீழ் தளத்தில் இருந்த கடைக்காரர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, கடைக்காரர்கள் உடனே மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு ஜெகதீசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அழுகிய நிலையில் இருந்த ஜெகதீசனின் உடல் அருகே மகன் கார்த்திக் சீனிவாசன் தியானம் செய்துவது போல் இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே, கடைக்காரர்கள் இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் மற்றும் ஷர்மிளாவுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஜெகதீசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஜெகதீசன் இறந்து 3 நாட்கள் ஆகியிருப்பதும், தந்தை இறந்தது தெரியாமல் அவரது உடல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திக் சீனிவாசன் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்த உணவுப்பண்டங்களை மட்டும் கார்த்திக் சீனிவாசன் சாப்பிட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடர் இறப்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்