Skip to main content

தங்க சண்முக சுந்தரம் ரவுடிப் பட்டியலில் இருந்து விடுவிப்பு; விவசாய சங்கங்கள் வரவேற்பு

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

social activist thanga shanmugasundaram name released from wanted list

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சை மனிதன் என அழைக்கப்படும் தங்க சண்முக சுந்தரம். பொது நலன், இயற்கை நலன், மக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டங்களை வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வந்தவர். அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் வெள்ள நீர் பாதிப்பால் நெற்பயிர்கள் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது இவர் மீது வழக்கு தொடரப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் விசாரணை கைதியாக  அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

 

இயற்கை வளங்களை காக்க வேண்டும்; நீர்த்தேக்கங்களும் அணைக்கட்டுகளையும் கட்டிடவும் ஏரி குளங்களை தூர்வாரிடக் கோரியும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், தமிழக முதல்வர் உட்பட பலருக்கும் மனு செய்வது; சாயம் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதோடு இயற்கை வளம் இயற்கை உணவு ஆகியவற்றை பாதுகாக்கவும் குரல் கொடுத்து வந்தவர். இப்படி  தனது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தவர் மீது தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மாவட்ட காவல்துறை இவரை மக்கள் நல போராட்டங்களில் பங்கு கொண்டு செயல்படுவதை தடுக்கும் பொருட்டும் மிரட்டும் நோக்கத்தோடும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பை குறைப்பதற்காகவும் இவரை ரவுடிப் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தனர்.

 

அண்மையில் மாவட்டக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், திருமானூர் காவல்துறையினர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதில் தங்க சண்முக சுந்தரம் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை மட்டுமே நடத்தி வருகிறார் என்றும் எந்த ஒரு குற்ற நடவடிக்கைகளிலோ சமூக விரோதச் செயல்களிலோ ஈடுபடவில்லை என்றும் ஆராய்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்டக் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் உத்தரவின் பேரில் ரவுடி பட்டியலில் இருந்து தங்க சண்முக சுந்தரத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மேலும் இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், "அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கை வழியில் பயணிப்பவர் பச்சை மனிதன் என்று அழைக்கப்படும் தங்க சண்முக சுந்தரம். இயற்கை விவசாயம் சிறுதானியங்களை விரிவுபடுத்த குரல் கொடுப்பவர் ஏரி குளங்களை தூர்வாரிட வேண்டும் என்றும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செழிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி வாங்கி காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க காரணமாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். தொடர் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். இவரை ரவுடிப் பட்டியலில் சேர்த்தது தவறு எனக் கருதியும் இதுநாள் வரை எந்த ஒரு குற்றச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்றும் ஆராய்ந்து அரியலூர் மாவட்டக் காவல்துறை அவரது பெயரை நீக்கியது வரவேற்கத்தக்கது" என்கிறார்கள் விவசாய சங்க பிரதிநிதிகள்.

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு நிர்வாகி வேலுமணி மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் அரியலூர் மாவட்ட நிர்வாகி டி.பழூர் பாண்டியன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, இந்திய விவசாய சங்க நிர்வாகி வாரணவாசி இராஜேந்திரன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி அறுசீர் தங்கராசு, நம்மாழ்வார் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்க நிறுவனர் பா.பாரதிதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பின் அரியலூர் சங்கர், தமிழ்க்களம் இளவரசன் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்