Skip to main content

’ஏப்பா ... ஆளை விடுங்கப்பா...’- காரில் பறந்த அமைச்சர் செங்கோட்டையன்

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
ச்

 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,   "தமிழ்நாடு முழுவதும் உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 11.17 லட்சம் மிதிவண்டிகள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது." என்றவர்,  வருகிற ஜனவரி 10ம்தேதிக்குள் மடிக்கணினி வழங்கவும், அம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 

 

 இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் தான் இந்த ஸ்மார்ட் கார்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டில் மாணவரின் பெயர், முகவரி, ரத்தவகையுடன், ‘கியூ ஆர் கோடு’ மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பெற்ற மாணவரின் சிம்கார்டினைப் போட்டவுடன், மாற்றுச்சான்றிதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த பள்ளி, கல்லூரியில் சேருவதாக இருந்தாலும், அவர்கள் இதற்கு முன் எந்த பள்ளியில் படித்தார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடியும். அடுத்து வருகிற
அரையாண்டுத்தேர்வு மதிப்பெண் என்பது வேறு பள்ளியிலோ, கல்லூரியிலோ சேர்வதற்கான மதிப்பீடு அல்ல. ஆகவே, புயல் பாதித்த மாவட்டங்களில் வழக்கம்போல், அரையாண்டுத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி வகுப்பிற்கான ஊக்கத்தொகை வழங்குவதும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதே போல்  புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள 84 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அடுத்த நாளே வழங்கப்பட்டு விட்டது. புயலால் சேதமடைந்து மக்கள் மாளாத் துயரில் இருக்கும்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது." என்றவர்,


 
நிவராணப்பணிகளைக் குறை சொல்லும் நடிகர்கமல் போன்றவர்கள் அங்கு சென்று பார்வையிட வேண்டும். குறை சொல்வது சுலபம்; நிறைவு செய்வது கடினமான வேலை. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனப் பேசிய செங்கோட்டையனிடம்,  செய்தியாளர்கள் " சார் ஓ.பி.எஸ்,,இ.பி.எஸ். பிரச்சனை தீர்ந்துவிட்டதா? தமிழக அரசு புயல் பாதிப்புக்கு கேட்டது 15 ஆயிரம் கோடி மத்திய பா.ஜ.க. அரசு இப்போது கொடுப்பது வெறும் 350 கோடி இது துரோகம் இல்லையா? "   என தொடர்ந்து அரசியல் கேள்விகள் கேட்க முயல,  "ஏப்பா ... ஆளை விடுங்கப்பா.... " என கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறி பறந்தார். 

 

சார்ந்த செய்திகள்