Skip to main content

வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்ட மணல் குவியல்கள் பறிமுதல்

Published on 27/04/2018 | Edited on 27/04/2018


 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர்  மற்றும் விராலிமலை தாலுகாவில் ஓடும் கோரையாறில் பல வருடங்களாக அனுமதியின்றி மணல் கடத்தல்கள் நடந்துவருகிறது. இதனை தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ரோந்து செல்வதும் மணல் அள்ளுவோர் தப்பியோடுவதும் தொடர்கதையாகி வந்தது.
 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரின் மணல் திருடிய லாரிகள் பிடிபட்டது. ஆனாலும் மணல் திருட்டு தொடர்ந்துள்ளது.இந்நிலையில் கோரையாற்றில் திருடப்பட்ட மணல் இலுப்பூர் தாலுகா வளதாடிப்பட்டி பகுதியிலும், விராலிமலை தாலுகா சூரியூர் பகுதியிலும் குவிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர். அதன் பிறகு  அப்பகுதியில் இலுப்பூர் ஆர்டிஓ ஜெயபாரதி  காலை முதல் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டார்.
 

 

அப்போது வளதாடிப்பட்டியில் நான்கு இடங்களிலும், சூரியூரில் ஒரு இடத்திலும் தனியார் பட்டா நிலம், புறம்போக்கு நிலம், குளக்கரை ஆகியவற்றில் ஆற்றுமணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   இதையடுத்து சுமார் நூறு யூனிட் அளவுள்ள ஐந்து மணல் குவியல்களுக்கும் சீல் வைத்தார். இதையடுத்து இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் கொண்டு டிப்பர் லாரிகளில் மணல் குவியல் இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இலுப்பூர் தாசில்தார் சோனைகருப்பையா, இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட அலுவலர்கள்உடனிருந்தனர்.
 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி ஒன்றியத்தில் அய்யங்காடு கிராமத்தில் அதிமுக பிரமுகரின் மணல் கடத்தல் லாரியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து 12 மணி நேரத்திற்கு பிறகு புதுக்கோட்டை சார் ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் ஒப்படைத்தனர். அன்று பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டததில் அறந்தாங்கி பகுதியில் லாரிகளை கண்டுகொள்ளாமல் விடும அதிகாரிகள் மாட்டு வண்டிகளை மட்டும் பிடிப்பதாக நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்