Skip to main content

தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா? சீமான் கண்டனம்

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''வடமாநிலத்தவர்களை சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா?'' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

toll gate


அதில், ''செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பணிபுரிந்த வடநாட்டைச் சேர்ந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது கோரத்தாக்குதல் தொடுத்து அவர்களின் மண்டை உடைக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அதற்குப் பின்விளைவாகவே, அச்சுங்கச்சாவடி உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. நேற்று (26-01-2020) நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் இதே போல் பெண்கள் உள்ளிட்ட 5 பேர் சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
 



 

 
சுங்கச்சாவடி எனும் பெயரில் எவ்வித கணக்குவழக்குமில்லாமல் பகல் கொள்ளையடிக்கும் இந்தக் கட்டமைப்பையே நாம் முற்றாக எதிர்க்கிறோம். இது மக்களின் பொருளியல் வளத்தைச் சுரண்டி மிகை இலாபத்தில் ஊதிப்பெருக்கும் முதலாளித்துவ நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கெதிராகப் பன்னெடுங்காலமாகக் கருத்துப்பரப்புரைகளும், களப்பணிகளும் செய்து அதனை மூடக்கோரிப் போராடிக் கொண்டிருக்கிறோம். இருந்தபோதிலும், அதனை மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தாது இருந்து அவைகள் தொடர்ந்து இயங்க வழிவகைச் செய்கின்றன.



 

 
சுங்கச்சாவடி அமைப்பே வேண்டாமென்று நாம் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் சுங்கச்சாவடி ஊழியர்களாக வடநாட்டவர்களைத் திட்டமிட்டு நியமத்துப் பயணிப்போரிடம் வாக்குவாதம் செய்வது அவர்களை ஆயுதங்களால் தாக்குவது எனத் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்கள் தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்ப்பதாகும். அண்மைக்காலமாகத் தமிழகத்தில் வடநாட்டவர்களின் வன்முறைகளும், அத்துமீறல் போக்குகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பிரித்திகா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதன் நீட்சியாகவே, செங்கல்பட்டு சுங்கச்சாவடியிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தமிழக அரசுப் பேருந்து ஊழியர்களைத் தாக்கியிருக்கிறார்கள். தமிழகத்திற்குப் பிழைப்பிற்கு வந்தவர்கள் தமிழக மண்ணின் மக்களைத் தாக்குகிறார்களென்றால், இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்ல முடியாது.

 

seeman

 
தமிழர்கள் மீதான வடநாட்டவர்களின் வன்முறையும், அடக்குமுறையும் இனியொரு முறை நிகழ்ந்தால் தமிழர் நிலம் வேறு மாதிரியான பின்விளைவுகளைத் தரும் என எச்சரிக்கிறேன். ஆகவே, முதற்கட்டமாகச் சுங்கச்சாவடி‌ பணிகளுக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இது தொடருமேயானால், செங்கல்பட்டில் நடந்ததைப்போல் மக்கள் புரட்சி மூலம் சுங்கச்சாவடிகள் யாவும் மூடப்படும் என எச்சரிக்கிறேன்''. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்