Skip to main content

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?.. ஜூலை 16ஆம் தேதி ஆலோசனை!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

Schools to open in Tamil Nadu ... July 16th consultation!

 

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் புதுச்சேரியில் ஜூலை 16ஆம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதனையொட்டி நேற்று (13.07.2021) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டிலும் பள்ளி திறப்பதற்கான முடிவுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் வரும் ஜூலை 16ஆம் தேதி கல்வித்துறைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளிக்கல்வி செயலாளர் காகர்லா உஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் ஆணையர் நந்தகுமார் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்களும் பங்கேற்கின்றனர். பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை மற்றும் இலவச பாடப்புத்தகம், மடிக்கணினி வழங்குதல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. அதேபோல் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் சேர்ப்பது, சிறப்பு எழுத்தறிவு மற்றும் அங்கீகாரம் வழங்குதல் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கடந்த 11ஆம் தேதி மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் கல்வி இடைநிற்றல் விகிதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்புகளில் சேருவோர் எண்ணிக்கை 68 சதவீதமாக உள்ளது எனவும், 1ஆம்  வகுப்பில் 94.8 சதவீதம் சேர்வதாகவும் அதில் 68.1 சதவீதம் மாணவர்களே பிளஸ் 2  முடிப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கிற்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும்போது இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து வரும் ஜூலை 16ஆம் தேதி  பள்ளிக்கல்வி செயலாளர் காகர்லா உஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்