இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, "குஜராத் மாநிலத்தில் ஜூலை 15- ஆம் தேதி 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றது. இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான கல்லூரிகளும் ஜூலை 15- ஆம் தேதி திறக்கப்படுகிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரிகளில் வருகைப்பதிவு என்பது கட்டாயம் இல்லை" என குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
அதேபோல், "ஹரியானாவிலும் ஜூலை 16- ஆம் தேதி முதல் 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு மேலும் குறையும் பட்சத்தில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்" என ஹரியானா மாநில கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.