Skip to main content

“நாம தமிழ்நாடு; இந்தியா ஒன்றியம்” - ஆளுநர் பேச்சுக்கு பள்ளி மாணவர்கள் தடாலடி

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

school student say thamizhagam not Tamil Nadu

 

“அப்ப நம்ம மாநிலத்தோட பேரு தமிழ்நாடுதானா? சரி இன்னொரு கேள்வி கேட்கவா?” எனத் தமிழ்நாடு குறித்து அடுத்த தலைமுறையினரை அப்டேட் செய்யும் ஆசிரியையின் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தன்னுடைய பெயரிலேயே நாடு என்ற பெருமையைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். பல்வேறு தனித்துவங்களையும், பழமையான வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட தமிழ்நாடு இந்தியாவின் முக்கிய மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இதற்கு, கடந்த 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தமிழ்நாடு எனச் சொல்வதைவிடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனப் பேசியிருந்தார். இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஹேஷ்டேக் தமிழ்நாடு என ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

 

இந்நிலையில், பள்ளி மாணவர்களோடு சேர்ந்துகொண்டு ஆசிரியை ஒருவர் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒருவர், “இந்த மாநிலத்தோட பெயர் என்ன என்று கேட்க, அதற்கு அந்த மாணவர்கள் தமிழ்நாடுதான் மிஸ் எனக் கூறுவார்கள். இந்தியாவோட மேப்ல என்ன எழுதியிருக்கும். அதுலயும் தமிழ்நாடுன்னுதான் இருக்கும் மிஸ். அதுல மட்டும் இல்ல எல்லா இடத்துலயும் தமிழ்நாடுன்னுதான் இருக்கும் மிஸ் எனக் கூறியிருப்பார்கள். அப்ப நம்ம மாநிலத்தோட பேரு,  தமிழ்நாடுதானா? சரி அப்ப நா இன்னொரு கேள்வி கேட்குறேன்... அதுக்கு சரியா பதில் சொல்றிங்களானு பாப்போம்... இந்திய அரசியலமைப்பு சட்டத்துல இந்திய நாடுன்னு இருக்குமா... இந்திய ஒன்றியம்னு இருக்குமா? எனக் கேட்க, அதற்கு அந்த மாணவர்கள் சற்றும் யோசிக்காமல், இந்திய ஒன்றியம்னுதான் எழுதியிருக்கும்” எனத் தடாலடியாகக் கூறுகிறார்கள். தமிழ்நாடு குறித்து அடுத்த தலைமுறையினரை அப்டேட் செய்யும் ஆசிரியையின் வீடியோ தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

- சிவாஜி 

 

 

சார்ந்த செய்திகள்