Skip to main content

சரத்குமார், ராதாரவி மீதான வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உத்தரவு!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

நடிகர் சங்க நிலத்தை அனுமதியின்றி விற்ற வழக்கில் நடிகர் சரத்குமார், நடிகர் ராதாரவி மீதான வழக்கை  மூன்று மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

 

s

 

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 26 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை  செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் அனுமதியின்றி அப்போதைய நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் விற்றதாக புகார் எழுந்தது.

 

அனுமதியின்றி நடிகர் சங்க நிலத்தை விற்றது தொடர்பாக சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு,  நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தொடுத்த வழக்கில்,  புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காஞ்சிபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நில விற்பனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார் தற்போதைய நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

 

நாசர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று நடிகர் சரத்குமார், நடிகர் ராதாரவி மீதான வழக்கை  மூன்று மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்