கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள வேப்பூர் பகுதியில் இரவு நேரங்களில் விடிய விடிய மணல் கடத்துவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து மணல் கடத்தல் கும்பலை கையும் களவுமாக பிடிக்க டெல்டா பிரிவு போலீசாருக்கு எஸ்.பி உத்தரவு பிறப்பித்தார்.
அதையடுத்து மணல் கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக கடந்த 15 நாட்களாக வேப்பூர் - ஐவதுகுடி பகுதியில் டெல்டா எஸ்.ஐ நடராஜன் தலைமையில் போலீசார் ரகசியமாக முகாமிட்டிருந்தனர். நேற்று இரவு மணிமுத்தாற்றிலிருந்து ஐவதுகுடி வழியாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏறுவதற்காக வந்த மணல் லாரிகளை மடக்கி பிடித்தனர் போலீசார்.
அவர்களிடம் விசாரித்ததில் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் மணல் கடத்தல் கும்பலின் தலைவன் மணிசேகர், லாரி உரிமையாளர் குமரேசன், லாரி டிரைவர்கள் மணிகண்டன், சக்திவேல், கதிர்வேல், மாயவேல், கமலக்கண்ணன், ரமேஷ் ஆகிய 8 பேரையும், மணல் கடத்திய ஆறு லாரிகள், பொக்லைன் இயந்திரங்களையும் டெல்டா போலீசார் பிடித்து வேப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்து, பின்னர் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.
இந்த மணல் கடத்தல் கும்பலின் தலைவர் மணிசேகர் விழுப்புரம் மாவட்டம் கூத்தக்குடியை சேர்ந்தவன். இவன் கடலூர் மாவட்டத்தில் பாயும் மணிமுத்தாறு, விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் கோமுகி ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாகவே மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகரித்ததால் மணல் கடத்தல் தொழிலை கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், சென்னை என பரவலாக விரிவுபடுத்தி உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவுடன், காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் 'தில்'லாக மணல் திருடியுள்ளான்.
ஐவதுகுடி அருகே மணிமுத்தாற்றங்கரை ஒரமாக பாஸ்கர் என்பவருக்கு சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் நிலங்களை குத்தகைக்காக வாங்கியுள்ளான். குத்தகைக்கு வாங்கிய நிலத்தின் அடியில் ஆற்று மணல் கிடைக்கவே அதை விற்பனை செய்ய முடிவெடித்து உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு மாமூல் கொடுத்து விட்டு இரவு நேரங்களில் மணல் கடத்தியுள்ளான்.
மணல் கடத்தலை பிடிப்பதற்காக முகாமிட்ட டெல்டா பிரிவு போலீசாரிடம் மாட்டிக்கொண்டது மணிசேகர் கும்பல். அதேசமயம் மணிசேகரை எப்படியாவது வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக கட்சி வித்தியாசமில்லாமல் அனைத்து கட்சியினரும் காவால்துறையிடம் சிபாரிசு செய்துள்ளனர். உள்ளூர் போலீசாரும் காப்பாற்றுவதற்காக கூடுமானவரை முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் மாவட்ட தலைமையிடத்து போலீசார் தலையீட்டால் வேறு வழியின்றி வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து சிறையிலடைத்தனர்.