Skip to main content

நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2,000 நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

salon shops tamilnadu government coronavirus lockdown relief fund announced


நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூபாய் 2,000 நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த 24-03-2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரணத் தொகை உட்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பலனடைந்து வருகின்றனர்.
 

முடிதிருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 14,667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்காததால், நலவாரியத்தில் பதிவு செய்யாத நபர்கள் தங்களது வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர், முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே  நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராமப் புறங்களில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவர்களிடமும், பேரூராட்சிப் பகுதிகளில் சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் இருக்கும் பகுதியின் மண்டல அலுவலர்களிடம் மனுவாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
 

 

அம்மனுக்களைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக ரூபாய் 2,000 ரொக்கமாக வழங்கியதைப் போன்று, நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூபாய் 2,000 ரொக்கமாக வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் நிர்வாக முதன்மை ஆணையர் வழங்குவார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்