சேலத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு வரும் 21, 22- ஆம் தேதிகளில் நடக்கிறது.
தமிழகத்தில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4500- க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில், சங்க மற்றும் வங்கி உறுப்பினர்களிடம் இருந்து டெபாசிட்டுகள் சேகரித்தல், சுயதொழில் தொடங்க கடனுதவி, நகைக்கடன், பயிர்க்கடன், அடமானக்கடன் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இப்பணிகளை மேற்கொள்வதற்கென உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த கூட்டுறவு வங்கி, கடன் சங்கங்களின் வளர்ச்சி நிலை, விரிவாக்கத்திற்கு ஏற்ப உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இப்பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு மையத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் 114 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 31- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 2000 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவற்றில் 1682 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு 1337 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவற்றில் 1127 விண்ணப்பங்கள் தகுதி உடையவையாக ஏற்கப்பட்டுள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 21, 22- ஆம் தேதிகளில் நடக்கிறது.
மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு 21- ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்வு அம்மாபேட்டையில் உள்ள கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, கோட்டை மகளிர் பள்ளி ஆகிய 4 மையங்களில் நடக்கிறது.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் உதவியாளர் பணியிடங்களுக்கு நவ., 22- ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வு, கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி ஆகிய 3 மையங்களில் நடக்கிறது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை www.drbslm.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" இவ்வாறு கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.