கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்தப்பெருமாள் கோவில் அமைந்துள்ள சன்னதி தெருவில் வசித்து வருபவர் காசிவிசுவநாதன். இவரது மகன் ராஜ சுப்பிரமணியன், தொழிலதிபரான இவர் சொந்தமாக பள்ளிக்கூடம், நவீன அரிசி ஆலை ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று மதியம் 3 மணியளவில் குடும்பத்தினருடன் அவர்கள் நடத்தும் பள்ளிக்கு சென்று விநாயகர் சதுர்த்தி பூஜை செய்துள்ளனர். பூஜைகளை முடித்துகொண்டு மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு வந்தவுடன் ராஜ சுப்பிரமணியன் தனது அறைக்கு சென்று சென்றுள்ளார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 32 சவரன் நகை 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் ராஜ சுப்பிரமணியன். போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்ததோடு கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து அவர்கள் உதவியுடன் தடையங்களை சேகரித்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதேபோல் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள வீட்டில் பகல் 3 மணியளவில் உள்ளே புகுந்து கொள்ளையடித்த சம்பவம் திருக்கோவிலில் நகரில் உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.