நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி ஊராட்சி நுகத்தூரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் தேவூர் இரட்டை மதகடியை சேர்ந்த பக்ரி முகமது என்பவரின் பண்ணையில் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்ததற்காக சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகை சாகுபடிக்காக கொடுத்துள்ளார் பக்ரிமுகமது. பக்கிரிசாமியும் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சாகுபடி செய்து வந்திருக்கிறார்.
பின்னர் அந்த நிலத்தை பக்கிரிசாமியிடமே விலைப்பேசி பக்ரி முகமது விற்பனை செய்துள்ளார். பக்கிரிசாமியும் நிலத்திற்கான தொகையை பக்ரிமுகமதுவிடம் கொடுத்துவிட்டு நிலத்தை தனது மருமகள் பெயரில் கடந்த ஆண்டு பத்திரப் பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் பக்கிரிசாமியின் தம்பி வேணுகோபால் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தேவூரில் குடியிருந்து வருகிறார். அவர் அந்தநிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக பிரச்சினை செய்துள்ளார், இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு மூன்று ஏக்கரில் விவசாய சாகுபடி செய்திருந்த நெற்பயிரில் எரி களைக்கொல்லி மருந்தை தெளித்து வேணுகோபால் பயிர்களை கறுகசெய்திருக்கிறார். ஆத்திரமடைந்த பக்கிரிசாமியும் அவரது மகன் பாண்டியனும் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டும் அதே போலவே சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களுக்கு எரி கலைக்கொள்ளி அடித்து கறுகவைத்துள்ளனர்.
மனமுடைந்துபோன பக்கிரிசாமியும் அவரது மகன் பாண்டியனும் விவசாய சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களுடன் சென்று நாகை மாவட்ட எஸ்,பியிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அவலம் அந்த பகுதியின் விவசாயிகளின் மத்தியில் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.