Skip to main content

''இதற்கு பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைகள் தான் காரணம்''-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

 'The reason for this is the seeds sown by Periyar, Anna and the artist' '- Chief Minister Stalin's speech

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்க்குப்பத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தைத் துவங்கிவைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''கரோனாவால் இழந்த காலத்தை ஈடுகட்ட அதிகப்படியான முயற்சிகளை மாணவர்கள் செய்தாக வேண்டும். பள்ளி நேரத்தில் மட்டுமே மாணவர்களை மடைமாற்றம் செய்துவிட முடியாது. அதனால் தான் பள்ளி முடிந்த பிறகும் மாணவர்களுக்கு சில பயிற்சிகள் தரப்போகிறோம். இதற்கு ஆசிரியர்களுடன் சேர்ந்து சில தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் முன்வந்திருக்கிறார்கள். இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மாணவ, மாணவியரின் வசிப்பிடத்திற்கு அருகேயே தன்னார்வலர்களால் கற்றல் வாய்ப்பு வழிவகை செய்யப்பட்டுள்ளது.1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் கற்பிக்க 12 ஆம் வகுப்பு முடித்த தன்னார்வலர்கள் தயார். 6 முதல் 8 ஆம் வகுப்பிற்குக் கற்பிக்க இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சோதனை அடிப்படையில் தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், நாகை, திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், ஈரோடு , கிருஷ்ணகிரி,  நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும். மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் இனிமையாக வழிநடத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்று.

 

இன்னார்தான் படிக்கவேண்டும் இன்னார் படிக்கக்கூடாது என்று ஒரு காலம் இருந்தது. அதை மாற்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம். இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல. இது ஒரு இனத்தின் ஆட்சி என நான் முன்னவே சொல்லியிருக்கிறேன். இன்று அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறி அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்திற்கு வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு அடிப்படை திராவிட இயக்கத்தை வலுவோடு வழிநடத்தி இந்த இனத்தின் அறிவையும், மானத்தையும் தட்டியெழுப்பிய தலைவர்கள் தான். பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைகள் தான்''  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்