பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேஷ்டி சட்டை அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஹெலிஹாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் புனித நீராடி அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் பாதுகாப்பு கருதி பக்தர்கள், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை ராமேஸ்வரம் தீவு முழுவதும் பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து சேவை நிறுத்தத்தால் கோவிலுக்கு சுமார் 3 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.