நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதிநாட்களில் அரசியல் கட்சித் தொடங்குகிறார் என்று பரபரப்பான தகவல்கள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது கட்சிப் பெயர் குறித்த யூகங்களும் வெளியாகின.
கட்சி தொடங்கும் முன்பே அதற்கான நிர்வாகிகளையும் நியமித்திருந்தார் ரஜினிகாந்த. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல வருட கனவு நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில், பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ரஜினிக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். கட்சித் தொடங்க சில நாட்களே உள்ளதால், அவரது ரசிகர் மன்ற நிரவாகிகள், வேகமாக பூத் கமிட்டிகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.
அதேபோல, இன்று (29.12.2020) புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் மாவட்ட நிர்வாகி தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் தங்கராசு ஆகியோர் ஆலங்குடி, வெல்லாகுளம் பகுதியில், பூத் கமிட்டி அமைப்பது குறித்து மன்ற கிளை நிர்வாகிகளிடம் படிவங்களைக் கொடுத்து பெற்றுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரஜினி கட்சித் தொடங்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானதால், பாதியில் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "தொடக்கத்தில் 120 பூத்களுக்கு கமிட்டி அமைத்துவிட்டோம். இப்போது, ஒரு பூத்துக்கு, 15 பேர் கொண்ட கமிட்டி அமைக்கச் சொன்னதால், ஒன்றியம் முழுவதும் அதற்கான படிவங்களைக் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இந்நிலையில், ரஜினிகாந்தின் அறிவிப்பு வெளியானதால், பாதியிலேயே திரும்பிவிட்டோம். இத்தனை வருடங்கள் காத்திருந்தோம். ஏமாற்றமாகத் தான் உள்ளது. அரசியல் கட்சித் தொடங்குவார் என்று கடன்வாங்கி மன்றங்களுக்குச் செலவுகள் செய்திருக்கிறோம்" என்றனர்.