பழனிமலை முருகன் கோயிலுக்கு வந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரோப் காரில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ''பழனியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் முருகனை தான் அனைவரும் வழிபடுகின்றனர். இனிமேல் வருபவர்களும் அதே முருகனை தான் வழிபடப் போகிறார்கள். இதுபோல அரசியலுக்கு வருபவர்கள் எம்.ஜி.ஆர் பெயரை கூறினால் வாக்குகள் கிடைத்துவிடும் என நம்புகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ஆட்சியை அதிமுக சிறப்பாக நடத்தி வருகிறது. எனவே எம்.ஜி.ஆருக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் அதிமுகவினர் மட்டுமே. கூட்டணியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டது. எனவே அவர்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை எந்தவித ஒளிவுமறைவின்றி தெரிவித்து, அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். அவர் நீண்ட நாட்கள் நோய்நொடியின்றி இருந்து கலையுலகில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ரஜினிகாந்த் விரும்பியது ஆன்மிக அரசியல்தான். அந்த அரசியலைத்தான் அதிமுக நடத்தி வருகிறது. திமுகவில் இருப்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது எனவே ஆன்மிக அரசியலை விரும்பும் ரஜினியின் ரசிகர்களும் அதிமுகவுக்குதான் வாக்களிப்பார்கள்.
முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டுகளை அளித்துள்ளார். திமுகவில் உள்ளவர்கள் பலதலைமுறைக்கு சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். தங்களால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டால் அந்தச் சொத்துக்களை காப்பாற்ற முடியாது என்பதால் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர். வருகிற தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி கொடுத்து மக்கள் தோல்வி அடையச் செய்வார்கள். எத்தனை ஊழல் புகார் கூறினாலும் உண்மை உறங்காது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தூய்மையான ஆட்சி மீண்டும் அமைப்பது உறுதி. தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,500 ரூபாய் பணத்துடன் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல ஒரு பண்டிகைக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது கிடையாது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்'' என்று கூறினார்.