Skip to main content

ரயில்வே உணவு வழங்கல் சேவை நிறுத்தப்பட்ட விவகாரம்: நான்கு வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Railway catering service suspended: High Court orders review in four weeks!

 

கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நடமாடும் உணவு வழங்கல் சேவையையும் நிறுத்தி வைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்நிலையில், ரயில்களில் நடமாடும் உணவு வழங்கல் சேவைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, இந்திய ரயில்வே, டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய டெண்டரை ரத்து செய்து, உணவு வழங்கல் சேவைக்காக கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களை அனுமதிக்கக் கோரி, இந்தியன் ரயில்வே நடமாடும் உணவு வழங்குவோர் சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ‘ரயில்வேயில் பல சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில், உணவு வழங்கல் சேவை இதுவரை துவங்கப்படவில்லை. இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என புகார் தெரிவிக்கப்பட்டது.

 

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் ‘புதிய டெண்டர் என்பது சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான். வழக்கமான ரயில்களில் உணவு வழங்கலை அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 


 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கரோனா ஊரடங்கால் ரயில்வே உணவு வழங்கல் சேவையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் சேவையை மீண்டும் துவங்குவது தொடர்பாக நான்கு வாரங்களில் பரிசீலித்து  தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென, இந்தியன் ரயில்வேக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

 

சார்ந்த செய்திகள்