அண்மையில் கோவையில் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்ததாக மாணவர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் சூலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ராகிங்கில் ஈடுபட்டதாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் பயின்று வந்தார் சேலம் அக்கரைப்பட்டி சேர்ந்த அகிலேஷ். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அகிலேஷை நான்காம் ஆண்டு மெக்கானிக் பிரிவு மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. அகிலேஷை கல்லூரி விடுதியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற சீனியர் மாணவர்கள் எங்களுக்கு எழுந்து நின்று மரியாதை தர வேண்டும், கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது. இந்த கட்டுப்பாடுகளை கட்டாயம் பிடிக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர். ஆனால் இதனை அகிலேஷ் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை அகிலேஷை சூலூர் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடையில் பணிபுரியும் தனபால் என்பவருடைய அறைக்கு சீனியர் மாணவர்கள் கொண்டு சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். செல்போனையும் பறித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சூலூர் காவல் துறையினர் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் முத்துக்குமார், கோகுல்நாத் மற்றும் டீக்கடை ஊழியர் தனபால் ஆகியோரை கைது செய்துள்ளனர்.