Skip to main content

ராஜேந்திர பாலாஜியால் ஏழைகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! - உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் மனு!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

The poor have been deceived by Rajendrapalaji! - Government reply petition in the Supreme Court!

 

திருச்சி சிறையில் ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் ராஜேந்திர பாலாஜி அடைபட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது, தமிழக அரசு. 

 

அந்த மனுவில், ‘ராஜேந்திர பாலாஜியால் ஏமாற்றப்பட்ட  நபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்தான்,  அவர் மீது பணமோசடி முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும்,  அவர் மீதான குற்றத்திற்கான அனைத்து முகாந்திரமும் இருந்ததாலும்,  வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டதால்தான்,  சென்னை உயர்நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. 

 

உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழக்கு இருக்கும் வரை ராஜேந்திர பாலாஜியைக் காவல்துறை கைது செய்யவில்லை.  அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனபிறகே, காவல்துறை சட்ட நடவடிக்கையை மேற்கொண்டது. குறிப்பாக,  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டபோது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ராஜேந்திர பாலாஜி,  பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று தலை மறைவானார். எனவேதான்,  தமிழக காவல்துறையினர்  தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை பல நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கைது செய்தனர்.  ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.  மேலும், ராஜேந்திர பாலாஜி மீது தற்போதும் தொடர்ந்து மோசடி புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. 

 

பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையிலேயே,  சட்டரீதியான நடவடிக்கைக்காக  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த விவகாரமானது,  வேலைக்காகக் காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை ஏமாற்றும் செயலாகும். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகும்.  எனவே,  இதை சாதாரணமாகக் கடந்துபோக முடியாது. தற்போதைய நிலையில்,  10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த   ராஜேந்திர பாலாஜிக்கு ஏதாவது நிவாரணம் வழங்கப்பட்டால் , அது வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும்.  அது வழக்கின் விசாரணையை பாதிக்கும்.

 

அதனால்,  தன் மீது பதிவான மோசடி  வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்