Skip to main content

குளங்களை மீண்டும் தூர்வார ரூ. 10 கோடி கேட்டு கிராமசபையில் தீர்மானம்... வெகுண்ட இளைஞர்கள்...!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் நடந்தது. கூட்டத்தில் கிராமசபை சிறப்பு அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதில் பிளாஸ்டிக் ஒழிப்பு, குடிதண்ணீர் சேமிப்பு, பிரமத மந்திரி குடியிருப்பு திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், பசுமை வீடு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம் போன்ற பொதுவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு கிராம மக்கள் பல தீர்மானங்களை மனுக்களாக கொடுத்தனர். 

grama sabha


இந்தநிலையில் தீர்மானம் எழுதப்பட்ட தீர்மானப் புத்தகத்தில் கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினரால் கிராமமக்களின் ஒத்துழைப்போடு சொந்த செலவில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வரும் பெரியகுளம், கோடியகுளம், அய்யனார் கோயில்குளம் உள்பட 9 குளங்கள், ஊரணிகள் தூர்வாரி ஆழப்படுத்தவும், இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் வரத்துவாரிகள், சீரமைக்கவும், சாலை ஓர வாய்க்கால்களை சீரமைக்கவும் என்று சுமார் ரூ. 10 கோடி க்கு அரசிடம் நிதி கேட்டு தீர்மானம் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து இளைஞர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இளைஞர்கள் சீரமைத்த குளங்களையே மீண்டும் தூர்வாருவார அரசிடம் நிதி கேட்பதா? அதிலும் ரூ. 10 கோடிகளுக்கு நிதி கேட்கப்பட்டிருக்கிறது. மொத்தமே ஒரு கோடி ரூபாய் செலவிற்கும் சீரமைக்கலாமே என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எல்லாம் 100 நாள் வேலை திட்டத்திற்கான கேட்கப்படும் நிதி என்று பதில் அளிக்கப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

தொடந்து ராஜேந்திரன் என்பவர் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு பலர் வீட்டுவரி, தண்ணீர் வரி செலுத்தவில்லை என்று ஊராட்சி செயலர் பதில் சொன்னார். மொத்தமாக ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சில கணக்குகளை சொன்ன போது இது சரியான கணக்குகள் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய ராஜேந்திரன்.. மே 2019 வரை மின்சார வாரியத்திற்கு ஊராட்சி நிர்வாகம் ரூ. 49 லட்சத்தி 98 ஆயிரத்தி 817 ரூபாய் பாக்கி உள்ளதாக மின்சார வாரியம் கணக்கு சொல்கிறது. ஏன் மின்சாரவாரியத்திற்கு பணம் செலுத்தவில்லை. எப்போது எந்த நிதியில் பணம் செலுத்தப்படும் என்று கேள்வி கேட்டார். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதில் கூறும் போது அனைத்து ஊராட்சியிலும் மின்கட்டணம் பாக்கி உள்ளது என்றார்.

தொடர்ந்து  தனி நபர் கழிப்பறைகளுக்கு ஏன் இன்னும் நிதி கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பயனாளிகள் பெயர்களில் குழப்பம் உள்ளதால் நிதி வரவில்லை. வந்ததும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம சபை அதிகாரி பதில் கூறினார். அதேபோல வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதால் அரசு திட்டங்களில் பயனடைய முடியவில்லை என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அது மத்திய அரசு எடுக்கும் கணக்கு என்று பதில் சொன்னார். 

தொடர்ந்து ரெத்தினம் என்பவர்.. முதலில் கொத்தமங்கலத்தில் குளம், வரத்து வாய்க்கால்களை சீரமைத்து வரும் இளைஞர்களுக்கு கிராம சபை பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்ப்பன் போன்ற பேரழிப்பு திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்ற தீர்மானங்களை மனுவாக கொடுத்தார். 

அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இளைஞர்மன்றத்தினர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கொடுத்தனர். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் தீர்மான புத்தகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் எழுதவில்லை. பொதுமக்கள் கொடுத்த தீர்மானங்கள் எழுதப்படுமா என்பதும் கேள்விக்குறிதான்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்