திருமங்கலம் உதவி ஆணையர் கமில் பாஷா மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் கடந்த 13-ஆம் தேதி இரவு திருமங்கலம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது மேஜை லாக்கரில் இருந்து 2,57,500 ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றினர்.
மேலும் அடுத்தநாள் நடந்த கூட்டு சோதனையில் கமில் பாஷாவை சந்திக்க வந்த கொரட்டூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வம் என்பரிடம் நடந்த சோதனையில், அவரிடம் 2,51,000 ரூபாயையும், அவருடைய டைரியில் இதுவரை கமில் பாஷாவிற்கு கொடுத்த தொகை பற்றிய கணக்கு குறிப்பு இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மொத்தம் ஐந்து லட்சம் தொகை பற்றி கமில் பாஷாவிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கூறிய பதில்கள் ஏற்றுகொள்ளும்படி இல்லை என தெரிவித்துள்ளனர் .
மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி ஆணையர் கமில் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான முழுத் தகவலையும் பெற இதில் தொடர்புடையவர்களிடமும், கமில் பாஷாவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளனர். எனவே குற்றம் சுமத்தப்பட்ட உதவி ஆணையர் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.