Skip to main content

பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிட கோரி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை 
கைவிட கோரி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்



பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிட கோரி சிதம்பரத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும்,  கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்கள். 300க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர். 

இதில் வறட்சியல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும், பயிர் கடன் வழங்கிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு குழு அமைத்திட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், பயிர் இன்சூரன்ஸில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கடலூர் மாவட்டத்தை பெட்ரோல் கெமிக்கல் மண்டலாமாக அறிவித்ததை கைவிட வேண்டும், விவசாய நிலங்களில்இறால் பண்ணைகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், கொள்ளிடத்தில்  உப்புநீர்  உள்ளே புகாதவாறு தடுப்பணை கட்டிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.  

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. வறட்சி நிவாரணமாக மத்திய அரசு வெறும் 1500 கோடி ரூபாய் மட்டுமே அளித்துள்ளது. இதுகுறித்து கேட்க தமிழக அரசுக்கு அக்கறை இல்லை, மணல் கொள்ளை நடக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காதது  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கண்டு கொள்ளப்படவில்லை என்றார். 

நீர் நிலைகள் தூர் வாரும் பணிகள் நடப்பதாக கூறப்பட்டாலும், அந்த பணிகள் ஒழுங்காக நடைபெற வில்லை, 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடம் ஆற்று தடுப்பணை திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை, நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே அதிமுக அரசு அக்கறை செலுத்தி வருகிறது. மணல் கொள்ளை, குடிநீர் தட்டுப்பாடு, தடுப்பணை திட்டங்கள் போன்ற எந்த குறைகளும் களையப்படவில்லை என்று முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

காளிதாஸ்

சார்ந்த செய்திகள்