Skip to main content

பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உழவர் சாவு: பயிர் சேதம் குறித்து ஆய்வு தேவை!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

 

மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத நிலையில், வேதாரண்யம அருகே விவசாயி திருநாவுக்கரசர் வெளியிலிருந்து டேங்கர் சரக்குந்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து வயலில் பாய்ச்சியும் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் வாங்கியக் கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவர் உயிரிழந்திருக்கிறார். வறட்சி பாதிப்பின் தீவிரம் துல்லியமாகத் தெரியாத நிலையில், அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும். அதன்பின் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற விவசாயி, வறட்சியில் பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இறந்தார் என்ற செய்தி கேட்டு, பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

வறட்சி காரணமாக எந்த சோகம் நிகழ்ந்து விடக்கூடாது என அனைவரும் கவலைப் பட்டுக்கொண்டு இருந்தோமோ அந்த சோகம் நிகழ்ந்து விட்டது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தமது ஊருக்கு அருகிலுள்ள புல்வெளி கிராமத்தில், வேதாரண்யத்திலுள்ள  வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு  அவர் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் எதிர்பாராமல் பெய்த மழையில் மூழ்கி சேதமடைந்தன.  
 

இதனால்,  அவர் பெரும் கடனுக்கு ஆளானார். நடப்பாண்டில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. சம்பா பயிருக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு மிகவும் தாமதமாகத் தான் காவிரி நீர் வந்தது என்பதால், திருநாவுக்கரசு நவம்பர் இறுதியில் தான் சாகுபடிப் பணிகளைத் தொடங்கினார். மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத நிலையில், கடந்த ஜனவரி 28-ஆம் தேதியே அணை மூடப்பட்டது. அப்போது திருநாவுக்கரசின் சம்பா பயிர்கள் பாதிக் கட்டத்தைக் கூட தாண்டியிருக்கவில்லை. இதையடுத்து வெளியிலிருந்து டேங்கர் சரக்குந்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து வயலில் பாய்ச்சியும் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் வாங்கியக் கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. 
 

விவசாயி திருநாவுக்கரசின் மறைவு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. காவிரிப் பாசன மாவட்ட உழவர்கள்  எந்த அளவுக்கு பரிதாபமான நிலையில் உள்ளனர் என்பதற்கு திருநாவுக்கரசின் மறைவு உதாரணமாகும். திருநாவுக்கரசின் மறைவுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்த கர்நாடகத்தின் பிடிவாதம் ஒரு காரணம் என்றால், கர்நாடகத்திடமிருந்து நீர் பெற ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்காமல் நாடகங்களை அரங்கேற்றிய பினாமி அரசு இன்னொரு காரணம். தமிழகத்தில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற 15 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது என்ற நிலையில், கர்நாடக அணைகளில் 38 டி.எம்.சிக்கும் அதிகமாக தண்ணீர் இருந்தது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்திடமிருந்து நீரைப் பெற்றிருந்தால் திருநாவுக்கரசின் பயிர்கள் கருகியிருக்காது; அவரும் அதிர்ச்சியில் இறந்து குடும்பத்தினரை தவிக்க விட்டிருந்திருக்க மாட்டார். ஆனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அஞ்சிக் கொண்டு, கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து தண்ணீர் வாங்கப்போவதாக அறிவித்து, நாடகம் நடத்தி, இறுதியில் எதுவும் செய்யாமல் தண்ணீரையும் வாங்காமல் உழவர்களுக்கு பெருந்துரோகம் செய்தது பினாமி அரசு.
 

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்களில் பாதியளவு கூட இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. பெருமளவிலான பயிர்கள் தண்ணீரின்றிக் கருகத் தொடங்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் திருநாவுக்கரசுக்கு ஏற்பட்ட சோகம் மற்ற உழவர்களுக்கும் ஏற்படக்கூடும் என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். கருகும் பயிர்களைக் காப்பது இனி சாத்தியமற்றது எனும் நிலையில் உழவர்களைக் காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். வறட்சி மற்றும் வெள்ளத்தால் பயிர்களை இழந்த உழவர்கள் மீள முடியாத கடன் சுமையில்  உள்ள நிலையில், அதிலிருந்து மீண்டு வர அரசு கை கொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் தான் தமிழக உழவர்களை அதிர்ச்சி சாவு மற்றும் தற்கொலைகளில் இருந்து காப்பாற்ற முடியும்.
 

எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்ற கொள்கை முடிவை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். வறட்சி பாதிப்பின் தீவிரம் துல்லியமாகத் தெரியாத நிலையில், அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும். அதன்பின் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

சார்ந்த செய்திகள்