Skip to main content

" தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதல்வரே!" - காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Part-time teachers who demanded that "Chief minister Stalin should do our work permanently as the kalaignar did

 

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சியமைந்து வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் 100 நாட்கள் ஆகப் போகிறது. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. 

 

இதனிடையே 11 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தர அறிவிப்பாணை வருமா என எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறுகையில், “11-ஆவது கல்வியாண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையில், பட்ஜெட்டில் பணிநிரந்தரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

 

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக தி.மு.க சார்பில் உறுதியளிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையில், கடந்த 10 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு பலவழிகளில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் தொகுப்பூதியத்திலே தான் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பலருக்கு 40 முதல் 55 வயது ஆகிவிட்ட சூழலில், வேறு எவ்விதப் பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் வாழ்வாதாரமானது மிகுந்த பாதிப்பில் இருக்கிறது. எனவே எங்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 

கலைஞர் முதல்வராக இருந்தபோது 55 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தார். அதுபோலவே தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் நிரந்தரம் செய்திட வேண்டும். ஆட்சிக்கு வந்த 100 நாளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கையை நிறைவேற்றி தரப்படும் என்பதை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளோம். எனவே பட்ஜெட்டிலேயே முதல்வர் எங்களின் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்