Skip to main content

"தமிழக வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் படிக்கட்டு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

"Paranthur Airport is a stepping stone for the development of Tamil Nadu" - Chief Minister M. K. Stalin's pride!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் வளர்ச்சி பெற்ற, கட்டமைப்பு வசதி மிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நம் மாநிலத்திற்கு வருகை புரியும் முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

தற்போது உள்ள சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த ஏழு ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.

 

சென்னை விமான நிலையத்தின் மென்மேலும் அதிகரித்து வரும் விமானப் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநிலத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையைத் தொடர்ந்துப் பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க, தகுதியான இடத்தைத் தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழக அரசு மேற்கொண்டது. 

 

புதிய விமான நிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து, சாத்தியமான இடங்களாகப் பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான ஒன்றான பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமான நிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

புதிதாக அமையவுள்ள விமான நிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. 


விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பின் புதிய விமான நிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்ட மதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும். 


மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008- ல் வெளியிட்டுள்ள புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி, தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் பெற மத்திய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இட அனுமதி ஒப்புதல் பெற்ற பின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். 

 

இதனைத் தொடர்ந்து, விமான நிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் பெறப்படும். 

 

தமிழகத்தின் வளர்ச்சியைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தைக் காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியினைக் காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. 

 

பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு, தமிழகத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்