திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழநி அருள்மிகு தண்டாயுத பாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 2 ஆயிரம் பக்தர்கள் குடமுழுக்கு நடைபெறும் இடத்தின் அருகே கலந்து கொண்டனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் முன் திரண்டிருந்து வழிபட்டனர்.
இந்நிலையில் அரோகரா அரோகரா என்ற முழக்கத்துடன், அமைச்சர் சேகர்பாபு பச்சைக் கொடி அசைக்க பன்னிரு திருமறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் எனத் தமிழ் ஒலிக்க ராஜகோபுரத்தின் மீது குடமுழுக்கு நிகழ்வாக புனித நீர் ஊற்றுதல் நடைபெற்றது. கோபுரத்தின் மீது அமைந்துள்ள தங்கக் கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றினர். அப்போது ஹெலிக்காப்டர் மூலம் கோபுரங்களுக்கு மலர் துவப்பட்டது. அதன் பின் பக்தர்களுக்கு குடமுழுக்கு நீர் தெளிக்கப்பட்டநிலையில், பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.