பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கையில் ஒளிரும் பட்டை குச்சிகளை மாவட்ட கலெக்டர் வினய் வழங்கினார்!
திண்டுக்கல் மாவட்டத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், கோவை உள்பட சில மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
இப்படி பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடந்து வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களில் ஒருசிலர் சாலை விபத்தில் சிக்குகின்றனர். பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் வினய் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்களுக்கு முறையான தங்கும் இடம், சுத்தமான குடிநீர் ஆகியவற்றை பாதயாத்திரைக்கு நடந்து செல்லும் இடங்களில் ஏற்பாடு செய்துள்ளார். குறிப்பாக இரவு நேரங்களில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு கையில் ஒளிரும் பட்டை, ஒளிரும் குச்சிகளை வழங்கினார்.
ஆத்தூர் ஒன்றியம், ஆத்தூர் கோழிப்பண்ணை பிரிவு அருகே மாவட்ட கலெக்டர் வினய் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை, ஒளிரும் குச்சிகளை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டருடன் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தனது கைப்பட ஒளிரும் பட்டைகளை அணிவித்து, ஒளிரும் குச்சிகளை வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என வாழ்த்தினார். அப்போது ஒரு சில பக்தர்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சீதாராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி(கி.ஊ.) மோட்டார் வாகன ஆய்வாளர் கே.விஜயக்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சி.எஸ்.பிரகாஸ்குமார், ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் எம்.பூங்குழலி, ஊராட்சி செயலர்கள் ஆத்தூர் மணவாளன், சீவல்சரகு பாலாஜி, வீரக்கல் முத்துச்சாமி (மான்) மற்றும் செம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ராதிகா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்தவுடன் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் இடங்களில் மாவட்ட கலெக்டர் வினய் ஆய்வு செய்ததோடு முக்கிய சந்திப்புகள் மற்றும் தங்கும் இடங்களில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை பொறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்!