நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் வாக்குவேட்டை அனல் பறக்கதுவங்கியுள்ளது.
கும்பகோணம் அடுத்துள்ள திருவிடைமருதூர் திருமண மண்டபம் ஒன்றில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, துணி நூல் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை, நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி, முன்னாள் எம்.பி.பாரதிமோகன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஒ.எஸ்.மணியன், " அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராஜ்ஜியம் அமைக்கும், தி.மு.க. வுக்கு பூஜ்யம் தான் கிடைக்கும்,"என்றார்.
டி.டி.வி.தினகரன் இணைப்பு குறித்து மதுரை ஆதீனத்தின் பேட்டியளித்திருப்பது குறித்து கேட்டதற்கு,"ஆதரிப்பது என்பது எல்லோருக்கும் உள்ள சுதந்திரம். ஆனால் அதனை ஏற்றுக்கொள்வது எத்தனை பேர், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது." என்றார்.
அதன்பிறகு அ.தி.மு.,க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியவர், " தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தரமற்று பேசுகிறார்.தேர்தல் ஆணையம் மிகுந்த கெடுபிடியாக உள்ளது. ஏ.டி.எம்.களுக்கு செல்லும் பணத்தையும், நகைக்கடைகளுக்கு செல்லும் நகைகளையும் பறிமுதல் செய்து பொதுமக்களுக்கு தொல்லை அளிக்கின்றனர்.
வேட்பாளருக்கு பூசணிக்காய் சுற்றினால் கூட 150 ரூபாய் செலவு கணக்கில் எழுதுவதாகவும்,டீ. குடித்தால் 13 ரூபாய், காபி குடித்தால் 17 ரூபாய், இட்லி வழங்கினால் ஒரு இட்லிக்கு 17 ரூபாய் என்று தேர்தல் ஆணையம் விதித்த விதிமுறை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை.அதற்கான வரைமுறைகளில் தாங்கள் கையெழுத்திடவில்லை. என்றும் அவர் பேசினார்.
மேலும், " தி.மு.க. வைச் சேர்ந்த துரைமுருகன் தனது மகனை வெற்றிபெற வைப்பதற்காக அதிக வாக்குகளை பெற்றுத்தரும் தி.மு.க. தொகுதி பொறுப்பாளருக்கு 50 லட்ச ரூபாய் வழங்குவேன் என்று கூறுவது அவர்களின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது." என்று பேசிமுடித்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.