பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் நண்பரிடம் தினகரனை சந்திக்க நேரம் கேட்டார், சென்ற ஆண்டு அதாவது 2017 ஜூலை 12ம் தேதி கோட்டூர்புரம் பில்டர் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசினார் பன்னீர்செல்வம். அப்போது அவர் பழனிசாமியை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சியை மாற்றுவோம் என கூறியதாக தங்க.தமிழ்செல்வன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது கூறியுள்ள நிலையில் தற்போது நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி தினகரன்தான் அ.ம.மு.கவை அதிமுகவுடன் இணைக்க தூதுவிட்டார் எனக்கூறியுள்ளார். மேலும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் கூறிய அவர், பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார் தினகரன் என கூறினார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
போன வருடம் திகாரிலுருந்து வந்த பிறகு ஜூன் 3-க்கு பிறகு பன்னீர்செல்வம் தன்னை பார்க்க விரும்பினார். வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி மற்றும் சில தலைமை கழக நிர்வாகிகளிடம் தன்னை அவர் பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். எனக்கு எதிராக செயல்பாட்டில் இருக்கும் அவர் ஏன் என்னை சந்திக்க நினைக்கிறார் என நான் சிந்தித்த நிலையில், என்னதான் அவர் பேச விரும்புகிறார் என்று பார்த்துவிட்டு வாருங்கள் என கூறினார்கள். இந்த சந்திப்பு நிர்வாகிகளுக்கு தெரிந்த விஷயம்தான் இது. இந்த சந்திப்பில் நடந்தது, தான் தவறு செய்துவிட்டேன், நான் பேசியதெல்லாம் தவறு, எனக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளிடம் பேசிவிட்டு உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம், எடப்பாடியை எதிர்க்க, அவரை ஆட்சியில் இருந்து இறக்க உங்களுடன் கரம் கோர்க்கிறோம் என ஓபிஎஸ் கூறினார். சரி பேசிவிட்டு சொல்லுங்கள் என சொல்லிவிட்டு வந்தேன். அதேபோல் மீண்டும் என்னை பார்க்கவேண்டும் என அதே நண்பர் மூலம் தூது விட்டார். ஆனால் நானோ அதுவெல்லாம் வேண்டாம் அவரும் நாமும் விலகி எங்கேயோ போய்விட்டோம் என்று கூறினேன். அதற்கு பிறகு கூட மேடையில் குன்றத்தூர் மலையை குண்டூசி உடைக்குமா? என பேசினார்.
அந்த முதல் சந்திப்புக்கு பிறகு அவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை நானும் தொடர்பு கொள்ளவில்லை ஆனால் போன செப்டம்பர் கடைசி வாரம் மீண்டும் தொடர்பு கொண்டதும் இதற்கு முற்றுபுள்ளி வைக்கவே இந்த தகவல் வெளிப்பட்டுள்ளது என கூறினார்.